ராசியின் லக்கினத்தின் குறியீடுகள்
ராசியின் லக்கினத்தின் குறியீடுகளைப் பார்க்கலாம். ராசியின் லக்கினத்தின் சின்னங்களை பொறுத்தவரை அந்தந்த ராசியினர் அல்லது லக்னத்தினர் மட்டும் அந்தக் குறியீடுகளை தியானிப்பது,பார்த்து வருவது,மனதளவில் மனனம் செய்து கொள்வது, கண்மூடி இருந்தாலும் அந்தக் குறியீடு கண்களுக்குள் வந்து போகும் நிலையை எட்டுவது-ஒரு நல்ல பலனைத் தரும்.சின்னங்களை தங்களோடு வைத்திருப்பது,விசிடிங் கார்டுகளில் பதிப்பது, அலுவலகத்தில் தங்கள் மேஜையில் படமாக ஒட்டி வைப்பது, வீட்டினில் வைத்திருப்பது, மொபைல் போனில் wall paper ஆக வைப்பது நன்மை தரும்.ராசி மற்றும் லக்கினம் வேறு வேறாக இருக்கும் அன்பர்கள் இரண்டையும் உபயோகம் செய்வது அதீத பலனை பெற்று தரும்.
மேஷம்
மேஷம் என்றால் பிறந்து வராத சக்தி என்று ஒரு பொருள் கூறலாம். பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பின் ஆதிக்கத்தை பெற்ற மேஷத்துக்கு செவ்வாய் அதிபதி ஆகிறார். இவர்களுக்கான சின்னம் ஆடு. மிகுந்த உத்வேகம் கொண்ட, தன்னம்பிக்கை அதிகம் கொண்ட ஒரு சின்னமாக இதைக் கூறலாம். இவர்கள் ஆடுகள் நிறைந்திருக்கும் படத்தினை, ஆடுகள் துள்ளித்திரியும் மகிழ்ச்சியாக உலவும் வீடியோக்களையும் பார்த்து வருவது மிகுந்த பலன் தரும். அதே போல் இவர்கள் கழுத்தினில் ஆடுகள் பொருந்திய, ஆடுகளின் சின்னங்கள் பொருந்திய டாலர்களை அணிவதும், கைவிரல்களில் ஆடுகளின் சின்னங்கள் பொருந்திய மோதிரங்கள் அணிவதும்,இவர்களுக்கு மிகுந்த நன்மை தரும். இந்த ராசியினர் அல்லது லக்னத்தினர் ஆடுகளை உண்பதை அறவே தவிர்ப்பது ஒரு உடனடியான நற்பலனை அவர்களின் வாழ்வினில் கொண்டு சேர்க்கும் என்றால் மிகையாகாது.
ரிஷபம்
ரிஷபம் என்றால் பலம் கொண்ட மாடு அல்லது காளை என்றும் கூறலாம். பஞ்ச பூத தத்துவத்தில் நிலத்தினை அடிப்படையாக கொண்ட இந்த ராசி அல்லது லக்னத்தை ஆட்சி செய்வது சுக்கிரனாகும். இவர்கள் காளையின் படத்தினை அல்லது வீடியோக்களை அடிக்கடி பார்த்து வருவது இவர்களுக்கு ஒரு அதீத தன்னம்பிக்கையையும் சக்தியையும் கொடுக்கும். சிவ ஆலயத்தில் உள்ள நந்திகேஸ்வரருக்கு வெள்ளி தோறும் இவர்கள் அருகம்புல் மாலை சாற்றி வர மிகுந்த நன்மை உண்டாகும். முடிந்தால் தினசரி நந்திகேஸ்வரரை சிவ ஆலயம் சென்று பத்து நிமிடங்கள் உற்றுநோக்கி அவரைத் தொடாமல் தியானித்து வர பல்வேறு நல்ல விஷயங்கள் நடப்பதை கண்கூடாகக் காணலாம்.
மிதுனம்
பொதுவாகவே அந்தந்த ராசியினர் மற்றும் நட்சத்திரத்தினர் அவர்களுக்கு உரிய குறியீடு அல்லது சின்னங்களை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பது அவர்களின் விசிட்டிங் கார்டு லெட்டர் ஹெட் போன்றவற்றில் பதிப்பது,அவர்கள் பார்க்கும் ஒரு சில இடங்களில் அதை ஒட்டி வைத்து பார்த்து வருவது, பொம்மைகளாக அவற்றை வாங்கி வைத்து பார்த்து வருவது போன்றவை பல விஷயங்களில் பல்வேறு வித நன்மைகளை அவர்களுக்கு கொடுத்து வரும்.இது அனைத்து ராசியினருக்கும் நட்சத்திரத்திற்கும் பொருந்தும்.தமிழகத்தில் உள்ளோர் அல்லது இந்தியாவில் உள்ளோர்,தமிழகத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் மற்றும் ஜெமினி குழுமத்தின் படங்களைப் பார்த்திருப்பீர்கள் அவர்களின் சின்னம் இரட்டையர்கள். மிதுனத்தின் சின்னமும் அதுவே. இதுபோன்று தங்களின் சின்னங்களை வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர். மிதுனத்தின் சின்னமான இரட்டையர்களை ஆளும் பஞ்சபூத தத்துவம் காற்று .இவர்களை ஆளும் கிரகம் புதன்.
கடகம்
பஞ்சபூத தத்துவத்தில் நீரை அடிப்படையாக கொண்டும் சந்திரனை ஆளும் கிரகமாக கொண்டும் உள்ள கடக ராசியினர் நண்டின் சின்னத்தினை பார்த்து வருவது நண்டின் படங்களை பார்த்து வருவது அவர்களுக்கு நன்மை தரும். அசைவ பழக்கம் உள்ளோர் நண்டினை உண்ணாமல் இருப்பதும் மிகுந்த நன்மையை கொடுக்கும்.
சிம்மம்
சூரியன் ஆளும் கிரகமான சிம்ம ராசியினர் பஞ்ச பூத தத்துவத்தில் நெருப்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆவார். இவர்கள் சிங்கத்தின் படத்தை வீட்டில் வைப்பது ஆகாது. வீடியோக்களாக பார்த்து வரலாம். அதே சமயம் வன்முறையில் ஈடுபடும் சிங்கங்களாக பார்த்து வருவதை தவிர்த்தல் வேண்டும். பொதுவாக ஏதேனும் மிருகக்காட்சி சாலைக்கு செல்லும் சமயங்களில் அங்குள்ள சிங்கத்திற்கு ஏதேனும் ஒரு உணவை கொடுக்க உங்களால் ஆன தொகையை கொடுத்து வருவதும்,சூரியனின் படத்தை வீட்டில் வைத்து பார்த்து வருவதும் மிகுந்த நன்மையை கொடுக்கும்.
கன்னி
பெயருக்கு ஏற்றார் போல் கன்னிப் பெண் கன்னி ராசி மற்றும் லக்னத்திற்கு உரிய குறியீடாக உள்ளது. பொதுவாக இந்த ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தோர் புதன் தோறும் கன்னிப்பெண்களுக்கு படிப்பதற்கு பேனா பென்சில் அல்லது புத்தகங்களை தானமாக அல்லது பரிசாக அளிப்பது இவர்களுக்கு மிகுந்த நன்மையைத் தரும். பெண் பொம்மை உருவத்தை வைத்து அதாவது தற்சமயம் பார்பி டால் எனப்படும் பல பொம்மைகள் உள்ளன.அது போன்ற பொம்மைகளை வாங்கி வைத்து இவர்கள் பார்த்து வருவதும் இவர்களுக்கு ஒரு நன்மையைச் சேர்க்கும். கன்னிப்பெண்களுக்கு பச்சை நிற ரிப்பன் பழைய பொருட்கள் வாங்கி பரிசளிப்பதும் இவர்களுக்கு மிகுந்த நன்மை தரும்.
துலாம்
எந்த ஒரு தருணத்திலும் நடுநிலையாக இருப்போர் என பெயர் பெற்ற துலா ராசி மற்றும் லக்கினம் காற்று தத்துவத்தை சேர்ந்ததாகும். இவர்களை ஆட்சி செய்வது சுக்கிரன். இவர்களுடைய சின்னமே தராசு தான். அதாவது தராசு எவ்விதத்திலும் மேலும் கீழும் நோக்கி சென்றாலும் முடிவில் சரி சமமாக நிற்கும் என்பது முக்கிய விஷயமாகும். அதைத்தான் இவர்களின் மனநிலையும் குறிக்கும். இவர்கள் தராசின் உருவத்தை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்திருப்பது அல்லது பொம்மையாக வைத்திருந்து பார்த்து வருவது அல்லது படமாக வைத்திருந்து பார்ப்பது ஒரு மனத்தெளிவு உண்டாக்கும். சீரிய முடிவுகளை எடுக்க வைக்கும்.
விருச்சிகம்
தேள் சின்னமான விருச்சிக ராசியினர் பஞ்ச பூத தத்துவத்தில் நீரைச் சார்ந்தவர்கள்.இவர்களுக்கும் செவ்வாய் தான் அதிபதி கிரகம் ஆகும். இவர்கள் தேள்கள் நிறைந்த வீடியோக்களை பார்த்து வருவது இவர்களுக்கு மிகுந்த ஒரு மன வலிமையையும் ஒரு மன உற்சாகத்தையும் கொடுத்து வரும். தாமதப்பட்ட வேலைகள் துரிதமாக நடக்கும். சோர்ந்து போய் இருப்பின், இவர்கள்,தேள்கள் நிறைந்த படத்தினை ஒட்டி வைத்து பார்த்து வருவது ,உற்சாக உணர்ச்சி தூண்டுதலால் எவ்வித தடைகளையும் தாண்டி வெற்றி காண வைக்கும்.
தனுசு
கடல்கன்னிகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.பாதி மீன் உருவமும் மீதி பெண்ணுருவமும் கொண்டது தான் கடல் கன்னிகள். அதுபோன்றே வில்லேந்திய மனிதன் பாதி உடலுடன் அதாவது பாதி மனித உடலுடனும் பாதி குதிரை உடலுடனும் இருப்பதுதான் தனுசு ராசியின் சின்னம் ஆகும். இந்த சின்னத்தினை வீட்டில் உங்களின் படுக்கை அறையில் பெரிய அளவு உருவமாக பொறித்தோ அல்லது ஒட்டி வைத்தோ பார்த்து வர பல நன்மைகளை அன்றாட வாழ்வில் எதிர்பார்க்கலாம். இதை தனுசு ராசியினர் மற்றும் லக்னத்தினர் இருவரும் செய்யலாம்.
மகரம்
மகரத்தின் சின்னம் முதலை. இவர்கள் முதலையின் சிறு உருவ பொம்மைகளை வைத்து ஆங்காங்கே வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் அப்பொழுது பார்த்து வருவது ஒரு சிறந்த பரிகாரமாக அமையும். தற்சமயம் முதலையின் பொம்மைகள்-நகரும் பொம்மைகள் சந்தைகளில் கிடைக்கின்றது. அதுபோன்றே முதலை உருவம் பொறித்த கீ செயின்கள் நிறைய வந்துள்ளன இவற்றை வாங்கி உபயோகிக்கலாம். வெள்ளியில் பொரித்த முதலையின் சின்னத்தினை வாங்கி கழுத்தில் அணிந்து வரலாம். இவை அனைத்தும் இவர்களுக்கு நன்மை சேர்க்கும்.முதலை பண்ணைகளில், அவைகளுக்கு உணவிற்காக ஏதேனும் பண்ணையின் உரிமையாளர் இடத்தில் நன்கொடையாக வழங்குவதும் இவர்களுக்கு வாழ்வினில் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும். இவர்களுக்கு அதிபதி சனி பகவான்.
கும்பம்
மகரத்தை போலவே சனியின் ஆதிக்கத்தை பெற்ற இந்த ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தோர் சோம்பேறித்தனத்தை அறவே தவிர்ப்பது அவசியம். பஞ்சபூத தத்துவத்தில் காற்றின் அடிப்படைத் தன்மையைக் கொண்ட இவர்கள் சண்டி ஹோமம் நடக்கும் இடத்தில் சென்று ஹோமத்திற்கு குடம் அல்லது கலசம் அல்லது கும்பம் எனக் கூறப்படும் ஒன்றை பிரார்த்தனையாக அளிப்பது இவர்களுக்கு மிகுந்த நன்மை சேர்க்கும். வருடம் இரு முறை இவ்வாறு செய்து வரலாம்.அதுபோன்றே கும்பம் ஒன்றை அலங்காரம் செய்து சுவாமி மாடத்தில் வைத்து தினசரி இவர்கள் வழிபட்டு வருவது இவர்களுக்கு வாழ்வில் பல நன்மைகளை கொண்டு சேர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மீனம்
எதிரெதிர் புறமாய் ஓடும் இரண்டு மீன்களை குறிப்பது மீன ராசி ஆகும். இவர்கள் மீன்களை உண்ணாமல் இருப்பதும்,மீன்களை வளர்க்காமல் இருப்பதும் பலவித நன்மைகளைத் தரும். வீட்டினில் மீனராசியின் உருவத்தை பொறிப்பது அல்லது ஒட்டி வைப்பது இவர்களுக்கு நன்மை சேர்க்கும். வியாழக்கிழமைகளில் சிவன் சன்னதி சென்று அங்குள்ள கோவிலில் குளத்தில் வாழும் மீன்களுக்கு ஏதேனும் உணவினை இட்டு வருவது இவர்களுக்கு வாழ்வில் பல வெற்றிகளை தொடர்ந்து சேர்க்க உதவும்.மீன்கள் சுகமாக இருக்கும் படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை இவர்கள் அடிக்கடி பார்த்து வருவது இவர்களுக்கு மிகச்சிறந்த நன்மை சேர்க்கும் பரிகாரமாக அமையும். எவ்வித வன்முறையும் இல்லாத படங்களாக பார்ப்பது மட்டுமே நன்மையை சேர்க்கும்.
முக்கிய குறிப்பு : இந்த இணைய வலை தளத்தில் இருக்கும் அனைத்து பரிகாரங்கள் மற்றும் பல புதிய முறைகளும் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. DMCA காப்பிரைட் சட்டத்தின் கீழ் வரும் ஒன்றாகும். இவற்றை காப்பி அடிப்பது மற்றும் தங்களின் யூ டியூப் சானலில் காப்பியடித்து போடுவது குற்றமாகும். தங்களின் சேனலும் வலை தளமும் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் உண்டு என்பதை அறிக.அன்பர்கள் மற்றும் இதனால் பயன்பெறுவோர் தாங்கள் மேற்கண்டவற்றை வேறு எந்த சானலில் அல்லது வெப்சைட்டில் கண்டால் உடனடியாக தகவல் தந்து உதவவும்.
கன்னி ராசி கு பெண் பாவை, தலையாட்டி பொம்மை, பெண் களிமண் பொம்மைகள் வைக்கலாம் sir உங்க வாய்ல birbi டால் வாங்கி வைக்க சொல்லாதீங்க..
ReplyDelete